What is Patta, Chitta Adangal | பட்டா என்றால் என்ன?

What is Patta, Chitta Adangal | பட்டா என்றால் என்ன?

What is Patta, Chitta Adangal | பட்டா என்றால் என்ன?

பட்டாஎன்றால்   என்ன

பட்டா என்பதற்கு ஒரே வரியில் விளக்கம் சொல்லிவிடலாம். அது ஒரு நில உரிமை சான்று. அதாவது குறிப்பிட்ட நிலம் உங்களுக்கு தான் சொந்தம், என்று அரசு அலுவலர்கள் மூலம் அளிக்கப்படும் சான்று பட்டா ஆகும்.

பட்டாவில் என்ன தகவல்கள் இருக்கும்?

பட்டா என்பது நில உரிமை சான்று என்று பார்த்தோம், அதில் என்ன தகவல்கள் அடங்கி இருக்கும் என்று நாம் இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நிலங்களுக்கு இரண்டு துறைகள் உரிம சான்றுகளை வழங்குகின்றன.

  1. பத்திர பதிவு துறை
  2. வருவாய் துறை

பத்திர பதிவு துறை 

சொத்து சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்து பாதுகாத்து பராமரித்து வருவது பதிவு துறை. 1908 ம் ஆண்டு இந்திய பதிவு சட்டம் என்று கொண்டுவரப்பட்டது. இது ஆவணங்களை பதிவு செய்தல் தொடர்பான செய்முறை சட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான சட்டம்.

வருவாய் துறை

நிலங்களை பற்றிய தகவல்களை பராமரிக்கும் அரசின் முக்கிய துறை.

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை உருவாக்கி பராமரித்து வருவது வருவாய் துறை.

பட்டாவில் உள்ள தகவல்கள்.

குறிப்பிடப்பட்டுள்ள நிலம் எந்த மாவட்டத்தை சேர்ந்தது, எந்த கிராமத்தை சேர்ந்தது, அதன் சர்வே எண்/புல எண் என்ன? உட்பிரிவு உள்ளதா? உரிமையாளர் பெயர் என்ன? நிலத்தின் அளவு, அதன் தன்மை போன்ற தகவல்கள் அடங்கி இருக்கும்.

Picture2

 

பட்டாவின் தன்மை எவ்வாறு பிரிக்கப்படுகின்றது?

நிலத்திலுள்ள மண்ணின் தன்மையை பொறுத்து நிலத்தின் தன்மையை வகைப்படுத்தலாம்.

1. நஞ்சை

2. புஞ்சை

3. மானாவாரி

4. மனை

 

நஞ்சை

நீர்ப்பாசன வசதி கொண்ட நிலம். விவசாயம் செய்ய ஏதுவான நிலம்.

புஞ்சை:

விவசாயம் செய்ய ஏதுவான நிலம் ஆனால் நீர் பாசன வசதி இல்லாத நிலம்.

மானாவாரி:

விவசாய நிலம் ஆனால் நீர் பாசன வசதி இல்லாமல் வான் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் நிலம்.

மனை:

குடியிருப்பு நிலம். மக்கள் வீடு கட்டி குடியிருக்க ஏதுவான நிலம் என்று பொருள். 

பட்டாவில் உள்ள நிலத்தின் அளவுகளை எப்படி கணக்கீடு செய்வது?

பட்டாவில் உள்ள நிலத்தின் அளவுகள் ஏர் மற்றும் ஹெக்டர். போன்ற அலகுகளால் குறிக்கப்பட்டிருக்கும். நம்முடைய பேச்சு வழக்கத்தில் நிலங்களை அளக்க செண்ட், சதுர அடி மற்றும் ஏக்கர் அலகுகளால் கூறுவோம். ஆனால் பட்டாவில் உள்ள அலகுகளோ வேறு அலகுகளால் குறிப்பிடப்பட்டிருக்கும். எப்படி சரியான அளவை கண்டுபிடிப்பது.

1ஏர் – 1076 சதுர அடி

1ஏர் – 2.47 செண்ட் 

1ஏர் – 100 சதுர மீட்டர்.

100 ஏர் – 1 ஹெக்டர்.

பட்டாவின் வகைகள் என்ன?

பட்டாவின் தன்மை பொருத்து அதன் வகைகளை பிரிக்கலாம் அல்லது பட்டா அடையும் மாற்றத்தைக்கொண்டும் வகை பிரிக்கலாம்.

1.தனிப்பட்டா

2.கூட்டுப்பட்டா

3.UDR பட்டா

4.கிராம நத்தம் பட்டா

5.TSLR பட்டா

6.தூசி பட்டா

தனிப்பட்டா

ஒருவரிடமிருந்து நீங்கள் ஒரு சொத்தினை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் கிரயம் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு பதிவு செய்யப்பட்ட ஆவணத்துடன் சேர்த்து பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். பட்டா மாற்றம் அடைந்த பிறகு அதில் உரிமையாளர் பெயரை பார்த்தால் உங்கள் பெயர் இருக்கும். மொத்த நிலத்தையும் கிரையம் செய்து, உங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்தல் தனிப்பட்டா ஆகும்.

கூட்டுப்பட்டா

பட்டாவின் உரிமையாளர் பெயரை பார்த்தோமேயானால் பல நபர்களின் பெயர் இருக்கும். அப்பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அனைவருமே அந்நிலத்தின் உரிமையாளர்கள் என்று பொருள்.

UDR பட்டா

UDR காலம் என்பது தமிழகத்திற்கு மிக முக்கியமான காலம் ஆகும், 

Updating Registry Scheme, நில உடைமை பதிவு மேம்பாட்டுத்திட்டம்.

1979 முதல் 1987 ம் ஆண்டு வரை தமிழகத்தில் கிராம் தோறும் நில உரிமையாளர்களிடமிருந்து [அ] நில அனுபவ தாரர்களிடமிருந்து இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெறப்பட்டது.

இந்த காலகட்டத்தில் அரசு அலுவலர்கள் கிராமம், கிராமமாக சென்று கிராம தலைவர்கள் மூலமாக நில உரிமையாளர்களை சந்தித்து, அவர்களின் அனுபவத்தில் உள்ள நிலங்களை அளந்து எல்லைகள் பிரித்து தோராயமாக ஒரு பட்டா வழங்கினர். பின்பு வழங்கப்பட்ட தோராயா பட்டாவின் மீது எந்த ஒரு ஆட்சேபனையும் வரவில்லை எனில் தூய பட்டா வழங்கப்பட்டது. இது விவசாய நிலங்களை முறைப்படுத்த நடந்த திட்டம் இந்த நிலவுடமை மேம்பாட்டு திட்டம். இக்காலத்தில் தான் நிலங்களை அளவிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டதா? அதற்கு முன்பு தமிழகத்தில் இல்லையா? 1937 ம் ஆண்டு நிலவரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு நில வரம்பு சட்டங்களை சீர் செய்து கொள்வது என்று 1937 ம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

UDR காலத்தில் கிராமத்திலுள்ள நிலங்களை அளந்து பொது இடங்களை (பள்ளி, கோயில், மருத்துவமனை, சாலைகள்) பிரித்து ஒவ்வொரு சர்வே எண்ணிற்கும் உட்பிரிவுகள் எல்லைகள் பிரித்து அதற்கு FMB வரைந்து

வைக்கப்பட்டது. இது நிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சனை உருவாகும் போது, அப்பிரச்சனையை தீர்க்க நல்ல ஒரு தீர்வாக இந்த FMB அமையும்.

நத்தம் பட்டா

1988 ம் ஆண்டு நடந்த நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் குடியிருப்பு மனைகளுக்கு பட்டா வழங்கப்பட்ட்து. இக்கால கட்டத்தில் கிராமம் கிராமாக அரசு அலுவலர்கள் நில அனுபவதாரர்களையும், நில உரிமையாளர்களையும். நேரில் சந்தித்து அவர்களின் நிலங்களை அளந்து பட்டா வழங்கினர். கிராம நத்தம் பட்டாவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  1. தோராய மற்றும் தூய பட்டா
  2. நில ஒப்படைப்பு பட்டா

தோராய மற்றும் தூய பட்டா: 

நத்தம் நில வரி திட்டம் நடந்த காலகட்டத்தில், அரசு அலுவலர்கள் நிலங்களை அளந்து, எல்லைகள் பிரித்து, தோராயாமாக பட்டா வழங்கினர். பின்னர், வழங்கிய பட்டாவின் மீது எந்த ஆட்சேபனையும் வரவில்லை என்றால் அந்த தோராய பட்டாவை தூய பட்டாவாக புது வடிவம் கொடுக்கின்றனர். இந்நிலங்கள் அனுபவத்தில் இருந்து வந்திருக்கும். ஆகையால் சொத்தின் உரிமையாளர் யாருக்கு வேண்டுமானாலும் கிரையம், தானம் செய்யலாம். உரிமையாளர் இறந்து விட்டால் அவரின் வாரிசுகள் பாகம் பிரித்துக்கொள்ளலாம்.

நில ஒப்படைப்பு பட்டா: 

ஒப்படைப்பு நிலத்திற்கு வழங்கப்படும் பட்டா இலவச பட்டா என்று அழைக்கலாம். தமிழ்நாடு அரசு ஏழை எளியோர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் இலவசமாக நிலங்கள் வழங்கி அதற்கு பட்டா கொடுத்தனர்.

இலவசமாக கொடுக்கப்பட்ட நிலப்பட்டா என்பாதால் தமிழக அரசு சில நிபந்தனையுடன் கொடுத்திருப்பார்கள். ஆகையினால் இந்நிலங்களை வாங்கும் போது, மிகவும் கவனத்துடன் நிபந்தனைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். .      

 

TSLR பட்டா :

TSLR – TOWN SURVEY LAND REGISTER OR TOWN SURVEY LAND RECORD

இந்த டவுன் சர்வே லேண்ட் ரிஜிஸ்தர், பட்டாவிற்கு இணையான ஒரு ஆவணம். டவுணில் நிலம் வாங்கும் போது இதை கண்டிப்பாக பார்க்க வேண்டியது அவசியம். பத்திரங்களை மட்டும் சரிபார்த்தல் தவறு. நில சம்பந்தமான வருவாய் துறை ஆவணங்களாகிய TSLR ஐ சரிபார்ப்பது நல்லது.

டவுன் எப்படி உருவாகும்?

ஊராட்சி, மக்கள் தொகை பெருக்கமானால் பேரூராட்சியாக மாறும்

பேரூராட்சி, மக்கள் தொகை பெருக்கமானால் நகாராட்சியாக உருமாறும். மக்கள் தொகையின் பெருக்கத்திற்கேற்ப அந்த ஊரின் தகுதி பெயர் மாறுகிறது. உதாரணமாக ஊர் – பேரூர்-நகரம்-மாநகரம்.

இப்படி தான் கிராமத்திலிருந்து நகரங்கள் உருமாறுகின்றன, நகரங்களும் பல கிராமங்களை உள்ளடங்கியவை என்பதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் சென்னை-600001 என்ற பின்கோடு சென்னை மாநகரத்தின் ஆரம்பம் என்று எல்லோரும் அறிந்தவை. நான் இங்கு கூறவந்தது சென்னை 600001 என்ற பின்கோடு கொண்ட இடமும் ஏதாவது கிராமத்தை சேர்ந்தவையாக தான் இருக்க முடியும்.    

TOWN SURVEY LAND REGISTER என்ன விவரங்கள் அடங்கியிருக்கும்.

  1. ப்ளாக் எண், சாலையின் பெயர்
  2. TS எண் / உட் பிரிவு
  3. பழைய சர்வே எண்
  4. கதவு இலக்க எண்
  5. அளவு [ஹெக்டர், ஏக்கர், சதுர மீட்டர்] 
  6. என்ன வகை வரி
  7. காலி மனை/குடியிருப்பு.

பட்டா ஏர் அல்லது ஹெக்டர் அலகுகளால் அளக்கப்படுகின்றது. ஆனால் TOWN SURVEY LAND REGISTER நிலங்கள் சதுர மீட்டர் அலகுவின் மூலம் அளக்கப்படுகின்றது.

1 சதுர மீட்டர் – 10.7639 சதுர அடிகள்

100 சதுர மீட்டர் – 1 ஏர்ஸ்

222.96 சதுர மீட்டர் – 1 கிரண்ட் [2400 சதுர அடிகள்]

10,000 சதுர மீட்டர் – 1 ஹெக்டர்

4046.82 சதுர மீட்டர் – 1 ஏக்கர்.

தூசி பட்டா

கிராம கணக்கில் 2சி என்பது, குறிப்பிட்ட நிலத்திலுள்ள சர்வே எண்ணில் உள்ள மரங்களின் எண்ணிக்கை குறிக்கும் புத்தகம். மரங்களுக்கு வழங்கப்படும் பட்டா 2சி காலப்போக்கில்    மறுவி தூசி பட்டா என்றாகி விட்டது. 

நிலங்களுக்கு எப்படி பட்டா கிடைத்திருக்கும்.?

தமிழ்நாட்டில் நிலங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. விவசாய நிலங்கள்

2. நத்தம் குடியிருப்பு நிலங்கள் 

3. மனைப்பிரிவு நிலங்கள் 

4. புறம்போக்கு நிலங்கள்.

நிலங்களை அதன் பயன்பாட்டினை பொருத்து வகைப்படுத்தி வைத்துள்ளனர். அதற்கு தகுந்தார் போல் பட்டா வழங்கி அதனை ஆவணங்களாக தயாரித்து பராமரித்து வருவதுடன் அதற்கு வரி வசூல் செய்து வருகின்றனர்.

மேற்கூறிய நிலங்களுக்கு அரசு பட்டாக்கள் வழங்கி பதிவேட்டில் பதிந்து, அதன் மேல் வரி வசூல் செய்து, அந்த நிலங்களுக்கு வழங்கிய பட்டாக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டால் அதன் மீது வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பட்டா மாற்றம் செய்து தரும்.

 

  1. UDR காலங்களில் மக்களுக்கு அவர்களின் அனுபவத்தில் இருந்த நிலங்களுக்கு பட்டா வழங்கி அதனை வரன் முறை படுத்தியும் கொடுத்தது தமிழக அரசு. இது நடந்தது 1979 முதல் 1987 வரை இக்காலகட்டத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர், மக்களால் பொன்மனச்செம்மல், எட்டாம் வள்ளல் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள்.

 

  1.   1990களில் முதலமைச்சர் பொறுப்பு வகித்த டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால்  துவங்கப்பட்ட திட்டம் நத்தம் நிலவரித்திட்டம். இத்திட்டத்தின் கீழ் குடியிருப்பு நிலங்களுக்கு நத்தம் பட்டா வழங்கினர்.

 

  1. நில ஒப்படைப்பு

தமிழக அரசு பல்வேறு கால கட்டங்களில் ஏழை எளியோர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும். நிலங்களை வழங்கி அதற்கு பட்டாவும் வழங்கியுள்ளார்கள்.

       நத்தம் புறம்போக்கில் காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வந்தவர்களுக்கு கிராம நத்தம் பட்டா வழங்கியுள்ளனர் நம் தமிழ்நாடு அரசு.

இவ்வாறு மேற்கண்ட வகையில் நம் நிலங்களுக்கு பட்டா கிடைத்திருக்கும்.

 

பட்டா பெயர் மாற்றம் அல்லது உருமாற்றம் எப்படி அடையும்?

வி ஏ ஓ (கிராம நிர்வாக அதிகாரி) அவரிடம் கிராம பராமரிப்பிற்காக 24 புத்தகங்கள் இருக்கும். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு கணக்குகளை கொண்டிருக்கும். அ – பதிவேடு என்று ஒரு புத்தகம் இருக்கும் இது தனிப்புத்தகம். இது அந்த 24ல் சேராது. 

 

பட்டாவின் பெயர் மாற்றம் நான்கு விதங்களில் நடைபெறும்.

பிரிவு 1- நிலத்தின் உரிமையை விட்டுக்கொடுத்தல்

பிரிவு 2- நில ஒப்படைப்பு

பிரிவு 3- பட்டா மாறுதல் (நில அளவில் பிளவு ஏற்படுதல்)

பிரிவு 4- இதர மாறுதல்கள் (நில எடுப்பு, நில வகைப்பாடு மாற்றம்)

நிலத்தின் உரிமையை விட்டுக்கொடுத்தல்

 

  1.       தன்னுடைய நிலத்தினை மற்றொருவருக்கு விற்பனை (அ) கிரையம் செய்தல் மூலமாக உரிமையை விட்டுக்கொடுத்தல்.
  2.       நீதிமன்ற ஆணையின் பெயரில் உரிமையை விட்டுக்கொடுத்தல்.

குறிப்பிட்ட நபரின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவின் பெயரில் மற்றொருவரின் உரிமை விட்டுக்கொடுத்தல்.

உதாரணமாக பார்த்தால் தான செட்டில்மெண்ட் கொடுத்த சொத்தினை, தான செட்டில் மெண்டில் கூறியது போல நடந்து கொள்ளாமல், வயதான பெரியோர்களை விட்டுவிடுதல், அந்த சூழ்நிலையில் அப்பெரியோர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடினால், தானபத்திரம் செல்லாது என்று கூற நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது. இவ்வாறு நடைபெற்றால் தானம் பெற்றவர்கள் தங்கள் உரிமையை தானம் கொடுத்தவர்களுக்கே கொடுத்தல்.    

    வரி அல்லது கடன் பாக்கி செலுத்த முடியாமல் தனி நபர் (அ) அரசாங்கமே நிலத்தை கைப்பற்றுதல்.இவ்வாறு செய்வதன் மூலம் உரிமையை விட்டுக்கொடுத்தல்.

      தான பத்திரம் மூலமாக சொத்துக்கள் பெற்று பட்டா மாற்றம் செய்தல்

       பரிவர்த்தனை மூலம் பட்டா மாற்றம் செய்தல்

ஒருவர் இறந்த பிறகு அவரின் வாரிசுகள் தங்களுக்குள் சொத்துகளை பிரித்து கொண்டு பட்டா பெயர்மாற்றம்  செய்தல்.

பதிமூன்று ஆண்டுகள் அனுபவத்தில் இருந்த நிலங்களுக்கு அரசு பட்டா வழங்குதல் மூலமாக பெயர்மாற்றம்             அடைதல்.

வாரிசுகள் இல்லாத சொத்தினை அரசே எடுத்துக்கொள்ளுதல்.

 

 

 

 

Share this post:

Related posts:

FSI stands for Floor Space Index, which is a crucial parameter in urban planning and construction. Also known as Floor Area Ratio (FAR) in some regions, FSI determines the permissible construction density on a given plot of land.

Are you a plot or layout owner in Tamilnadu? Exciting news! The government has announced that the last date to apply for regularization of unapproved plots or layouts is 29th February 2024. If you're wondering how to go about the...

Want to list your property?

We'll help you to sell your home.
Sign Up Today