அடுக்குமாடி குடியிருப்பிற்கு பட்டா வாங்க முடியுமா?
எந்த சொத்து கிரையமாக வாங்கினாலும் அல்லது தானமாக கிடைத்தாலும் அந்த சொத்திற்கான பட்டா மாற்றம் செய்து கொள்வோம். ”பட்டா” அந்த சொத்தின் உரிமையை குறிக்கும்.
பட்டா என்பது நில உரிமை சான்று. அவ்வாறு இருக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு பட்டா குடியிருப்பின் உரிமையாளரின் பெயரில் வாங்க முடியுமா? என்ற கேள்விக்கு ஒரு வரியில் விடை கூறிவிட முடியும்.
ஆம் முடியும். இது சாத்தியமே! இதன் கூறுகளை கீழே விவரிக்கின்றேன். தொடர்ந்து படியுங்கள்.
கீழே விவரித்துள்ள தலைப்புகள்.
அடுக்குமாடி குடியிருப்பு என்றால் என்ன?
அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடம் எவ்வாறு கணக்கிட்ப்படுகின்றது?
பிரிபடாத பாகம் என்றால் என்ன?
பிரிபடாத பாகம் எவ்வாறு கணக்கிடுவது?
அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் போது என்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.
கேள்வி பதில்
அடுக்குமாடி குடியிருப்பு என்றால் என்ன?
உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் மனிதர்களுக்கு அத்தியாவசியமானவை. மக்கள் தங்களின் வேலைக்கென நகரங்களை நோக்கி நகரும் போது, நகரத்தின் மக்கள் தொகை பெருக்கமடைகின்றது. இதனால் உறைவிடத்தின் தேவை பல மடங்கு உயர்ந்து விடுகின்றது. தேவைக்கேற்ப சந்தை விலையும் பல மடங்கு உயர்ந்து விடுகின்றது. வீடு கட்டுவதற்கான நில பற்றாக்குறை ஏற்படுகின்றது. சமானிய மக்களால் வீடு வாங்குவது கடினம் என்ற சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் என்ற தொகுப்பு வீடுகள் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தினர். மும்பை போன்ற நகரங்களில் முதலில் பிரபலமடைந்தது. 1980 களில் தமிழ்நாட்டில் தலைகாட்டின. 2000 ம் ஆண்டிற்கு பிறகு மலமலவென வேகமெடுத்து அபரிவிதமான வளர்ச்சியடைந்தது இந்த தொகுப்பு வீடுகள்.
ஒரு சொத்து வாங்கும் போது நிலமும் அதன் மேல் கட்டப்பட்ட கட்டிடமும் சேர்ந்தே விற்கப்படும், வாங்கப்படும். ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் தொகுப்பட்ட கட்டிடத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிடம், மற்றும் நிலத்தில் பிரிபடாத உரிமையும் கிடைக்கும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நிலத்தின் மீது எல்லைகள் பிரிக்கப்படாத கூட்டுரிமை இருக்கும்.
அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?
கட்டிடத்தின் அளவுகளை மூன்று வகையாக கணக்கிடலாம்.
சூப்பர் பில்டப் ஏரியா (Super Buildup Area) / மிகுதியாக கட்டப்பட்ட கட்டிடம்.
கட்டிடத்தின் பீடம் / பிளிந்த் ஏரியா (Plinth Area)
கார்பட் ஏ ரியா (Carpet) / தரைவிரிப்பு பகுதி
சூப்பர் பில்டப் ஏரியா / மிகுதியாக கட்டப்பட்ட கட்டிடம்.
ஒட்டு மொத்த கட்டிடம். கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும், பொது பயன்பாட்டிலுள்ள கட்டிடத்தின் அளவுகளையும் சேர்த்து கூறுவது ஆகும்.
கட்டிடத்தின் பீடம் / பிளிந்த் ஏரியா
சுற்று சுவரின் வெளிப்புறத்திலிருந்து அளக்கப்படும் கட்டிடத்தின் அளவினை கட்டிடத்தின் பீடம் / பிளிந்த் ஏரியா கூறுலாம்.
கார்பட் எரியா/ தரைவிரிப்பு பகுதி
சுற்று சுவரின் உள்புறத்திலிருந்து அளக்கப்படும் கட்டிடத்தின் அளவினை கார்பட் எரியா/ தரைவிரிப்பு பகுதி அழைக்கலாம்.
அடுக்குமாடி குடியிருப்பின் நிலம் அதாவது அடிமனையினை பாகங்கள் பிரிக்காமல் பிரிபடாத நிலமாக எடுத்துக்கொள்வது.
பிரிபடாத பாகம் என்றால் என்ன?
தொகுப்பு வீட்டின் அடிமனையில் உங்கள் கட்டிடத்தின் அளவிற்கேற்ப குறிப்பிட்ட நிலம் எல்லைகள் பிரிக்காமல் வழங்கப்படும். நிலத்தின் மீதான அத்தனை உரிமைகளும் உங்களுக்கு உண்டு.
பிரிபடாத பாகம் எவ்வாறு கணக்கிடுவது?
தமிழ்நாட்டில் கட்டிடம் கட்ட தரமான கல், மணல், சிமெண்ட் மட்டும் போதாது. அரசு வகுத்துள்ள கட்டுமான நிபந்தனைகளையும், செயல்முறைகளையும் கடைபிடிக்க வேண்டும். கட்டிடத்தின் உயர அளவினை வைத்து இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.
குறைந்த உயரம் கொண்ட கட்டிடம்.
அதிக உயரம் கொண்ட கட்டிடம்.
இவைகளை கணக்கிடுவதற்கு FSI or FAR என்ற கணக்கிடு முறையினை கையாளுகின்றனர்.
தமிழ்நாட்டில் FSI அதிக பட்சமாக 2 என்று கணக்கிடப்படுகின்றது.
உதாரணமாக 2400 சதுர அடி நிலத்தில் 4800 சதுர அடி கட்டிடம் உள்ளது என கொள்வோம்.
பிரிபடாத பாகம் அளவிடும் முறை
ஃ 2400/4800=0.50
கட்டிடம் பிரிபடாத பாகம்
1100 சதுர அடி * 0.50 = 550 சதுர அடி
1000 சதுர அடி * 0.50 = 500 சதுர அடி
900 சதுர அடி * 0.50 = 450 சதுர அடி
900 சதுர அடி * 0.50 = 450 சதுர அடி
900 சதுர அடி * 0.50 = 450 சதுர அடி
மொத்த நிலத்தின் அளவை மொத்த கட்டிடத்தின் அளவுடன் வகுத்தால் வரும் தொகையை ஒவ்வொரு வீட்டின் அளவுடன் பெருக்கினால் கிடைப்பது பிரிபடாத பாகம்.
அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் போது என்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.
நிலத்தின் ஆவணம்
மூலப்பத்திரம்
அடிநிலத்தின் பட்டா
கட்டிட ஒப்புதல் CMDA / DTCP
கிரைய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விபரங்கள் மற்றும் விற்பவரின் விபரங்கள் முந்தைய ஆவணத்துடன் ஒத்து செல்கிறதா என்று பார்க்க வேண்டும் மற்றும் பட்டாவுடன் அதன் தகவல்களுடன் ஒத்து இருக்கின்றதா என்பதனை சரி பார்த்துக்கொள்ளவும்.
மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் அடிநிலத்திற்கானது. அடிமனை சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அதன் துறைகளின் நகல் பெற்று அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்வது நல்லது.
அடுக்குமாடி கட்டிடத்திற்கான அனுமதி ஒப்புதல் கடிதம்
கட்டிடத்திற்கான வரைபடம்.
கேள்வி பதில்
அடுக்குமாடி குடியிருப்பை பொருத்த வரை பிரிபடாத நிலமும், தொகுப்பு கட்டிடமும் ஒரே கூறுகளே. இதனை தனியாக பிரித்து பார்க்க இயலாது.
அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்த வரை ஏற்கனவே வாங்கி உபயோகிப்போர், அல்லது வாங்க விருப்பமுள்ளோர் அனைவரின் கேள்வியும் பிரிபடாத பாக நிலத்திற்கு பட்டா கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்கும்.
தனிப்பட்டாவாக கிடைக்குமா? அல்லது கூட்டுபட்டாவாக கிடைக்குமா?
கூட்டுப்பட்டாவாக கிடைக்கும்.